24 நவம்பர் 2022, வியாழன்

“என் ஆன்மா ஆண்டவரின் கோயில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது”

பொதுக்காலத்தின் முப்பத்து நான்காம் வாரம் வெள்ளிக்கிழமை


திருப்பாடல் 84: 2, 3, 4-5a, 7a (திவெ 21: 3)

“என் ஆன்மா ஆண்டவரின் கோயில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது”

பாலைநிலத்தில் இரண்டு வீடுகள்:


ஒரு சமயம் பாலை நிலத்தின் வழியாக நடந்து சென்ற மனிதன் ஒருவன், வழியைத் தவறவிட்டான். இதனால் அவன் அங்கேயே வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.

இது நடந்து ஒருசில ஆண்டுகள் கழித்து, பாதசாரிகள் அப்பக்கமாய் நடந்து வந்தார்கள். அவர்கள் அந்த மனிதனைப் பார்த்துவிட்டு, “நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?” என்றார்கள். அவன் நடந்தது அனைத்தையும் அவர்களிடம் எடுத்துச் சொன்னான் .

பின்னர் அவர்கள் அங்கு இரண்டு வீடுகள் இருப்பதைப் பார்த்துவிட்டு, “இவை யாருடையவை?” என்று கேட்டார்கள். அவன், “இரண்டு என்னுடையவைதான்” என்று சொன்னதற்கு, “ஒரு மனிதருக்கு ஒரு வீடு போதாதா? எதற்கு இரண்டு வீடுகள்?” என்று அவர்கள் கேட்டார்கள். அப்போது அவர் அவர்களிடம், “ஒரு வீடு தங்குவதற்கு, இன்னொரு வீடு இறைவனிடம் வேண்டுவதற்கு” என்றான். அவன் இவ்வாறு சொன்னதைக் கேட்டுப் பாதசாரிகள், அவனுக்கு ஆண்டவர்மீது இருக்கும் பற்றினை நினைத்துப் பெருமிதம் அடைந்தார்கள்.

ஆம், இந்த நிகழ்வில் வரும் மனிதன் ஆண்டவரின் இல்லத்தின்மீது மிகுந்த பற்று வைத்திருந்தான். அதனால்தான் அவன் பாலைநிலத்தில் இருந்தபோதும், அவனுக்கென ஒரு கோயில் கட்டி, அதில் ஆண்டவரை வழிபட்டு வந்தான். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியர், “என் ஆன்மா ஆண்டவரின் கோயில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கிறது” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

லேவியரின் ஒரு பிரிவினராகிய கோராகியர் பாடிய பாடல்தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 84. சியோன் மலைத் திருப்பயணப் பாடல் வகையைத் சேர்ந்த இத்திருப்பாடலில் அதன் ஆசிரியர், தன் ஆன்மா ஆண்டவரின் கோயில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிப்பதாகக் கூறுகின்றார்.

கடவுளின் கோயில் முற்றங்களுக்காக ஏங்குவதும், அங்கு கேட்கும் அவரின் வார்த்தையை வாழ்வாக்குவதும் மிகவும் இன்றியமையாதவை. இன்று ஒருசிலர் ஆண்டவரின் இல்லத்திற்குச் செல்வதற்கும், அங்கே போதிக்கப்படும் அவரின் வார்த்தையைக் கேட்டு, அதை வாழ்வாக்குவதற்கும் விருப்பமில்லாமல் இருக்கின்றார்கள்.

அறிவிக்கப்படும் இறைவார்த்தையைக் கேட்டால்தான் நம்பிக்கை ஏற்படும் (உரோ 10:17). அந்த நம்பிக்கையே நம்மைக் கடவுளுக்கேற்புடையவர்களாக மாற்றும். ஆதலால், நாம் ஆண்டவரின் இல்லத்திற்கு ஆர்வமாய்ச் சென்று, அங்கு அறிவிக்கப்படும் வார்த்தையைக் கேட்டு, அதை வாழ்வாகுவோம்.

சிந்தனைக்கு:

 ஆண்டவரின் இல்லம் மன அமைதியின் பிறப்பிடம்.

 கடவுளைத் தேடுவோர், கைம்மாறு பெறாமல் போகார்.

 கடவுள் நம் ஒவ்வொருவரிலும் குடிகொண்டிருக்கின்றார் என்பதை உணர்ந்து, எல்லாருக்கும் உரிய மதிப்பளிப்போம்.

இறைவாக்கு:

‘கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர் ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர்’ (திபா 24: 3-4) என்பார் திருப்பாடல் ஆசிரியர். நாம் கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் கொண்டவர்களாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.