24 நவம்பர் 2022, வியாழன்

“ஆண்டவர் நல்லவர்”

பொதுக்காலத்தின் முப்பத்து நான்காம் வாரம் வியாழக்கிழமை


திருப்பாடல் 100: 1-2, 3, 4, 5 (திவெ 19: 9a)

“ஆண்டவர் நல்லவர்”

ஆண்டவர் நல்லவர் என்பதற்கான சான்று:


Joan of Arcadia என்ற பிரபல தொலைக்காட்சித் தொடரில் வரும் காட்சி இது.

கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட ஜோன் என்ற சிறுமி ஒருநாள் கடவுளிடம், “கடவுளே! நீர் நல்லவர் என்பதை நிரூபியும்” என்றாள். உடனே கடவுள் அவள் முன் தோன்றி, “எப்போது? எங்கே?” என்று கேட்டதும், அவள், “இப்போதே, இங்கே” என்றாள்.

அப்போது கடவுள் அவளிடம், அருகில் இருந்த ஒரு பழமரத்தைக் காட்டி, “இந்தப் பழ மரம் போதும் நான் நல்லவர் என்பதை நிரூபிக்க” என்றார். “அது எப்படி?” என்று சிறுமி ஜோன் கேட்டதற்குக் கடவுள் அவளிடம், “எங்கே நீ ஒரு பழ மரத்தை இங்கேயே படை” என்றதும், சிறுமி ஜோன், “என்னால் அப்படியெல்லாம் படைக்க முடியாது... நீர் நல்லவர் என்பதை இப்போது ஏற்றுக்கொள்கின்றேன்” என்றாள்.

இந்த உலகமும் இதில் உள்ள யாவும் கடவுள் நல்லவர் என்பதற்குச் சான்றாக இருக்கின்றன. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப் பாடல், “ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு” என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

“அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!” என்ற இறைச் சொற்றொடரோடு தொடங்கும் திருப்பாடல் 100, நமக்கு இரண்டு முக்கியமான கருத்துக்களை வலியுறுத்திக் கூறுகின்றது. ஒன்று, ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்த வேண்டும், அதுவும் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமல்ல, அனைத்து உலகோரும் ஆர்ப்பரித்து வாழ்த்த வேண்டும். இரண்டு, நாம் ஏன் ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்த வேண்டும் எனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு.

இந்த மண்ணுலகில், இயேசு சொல்வது போல், கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் யாருமில்லை (மத் 19: 19). மேலும் அவர் நல்லவராய் இருப்பது மட்டுமல்லாமல், அவரது பேரன்பு என்றும் உள்ளதாக இருக்கின்றது. மனிதர்கள் சில நேரங்களில் அன்பு செய்யலாம்; ஆனால், எல்லா நேரத்திலும் அவர்களால் அன்பு செய்ய முடியாது. ஆண்டவர் ஒருவரால் மட்டுமே நம்மை என்றும் அன்புசெய்ய முடியும். ஏனெனில், அவர் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்கு உண்மையாய் இருக்கின்றார்.

இத்தகைய நல்லவரும் பேரன்புமுள்ளவருமான ஆண்டவரை நாம் ஆர்ப்பரித்துப் பாடுவதே முறை!

சிந்தனைக்கு:

 ஆண்டவர் வல்லவராய் இருப்பது மட்டுமல்லாமல், நல்லவராகவும் இருக்கின்றார்.

 ஆண்டவரின் மக்கள் அவரைத் தங்கள் வாழ்வால் பிரதிபலிக்க வேண்டும்

 ஆண்டவரைப் புகழ்ந்து பாடுகின்ற நாம் அபரிமிதமாக ஆசிகளைப் பெறுகின்றோம்.

இறைவாக்கு:

‘நன்மையை நாடுங்கள்; தீமையைத் தேடாதீர்கள். அப்பொழுது படைகளின் ஆண்டவர் உங்களோடு இருப்பார்’ (ஆமோ 5:14) என்பார் ஆமோஸ் இறைவாக்கினர். நாம் நல்லவராம் கடவுளைப் போன்று நல்லதையே செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.