24 நவம்பர் 2022, வியாழன்

உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது

பொதுக்காலத்தின் முப்பத்து நான்காம் வாரம் வியாழக்கிழமை


I திருவெளிப்பாடு 18: 1-2, 21-23, 19: 1-3, 9a
II லூக்கா 21: 20-28

உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது

பார்த்திருத்தலும் காத்திருத்தலும்:


அது கடற்கரையோரமாய் இருந்த ஓர் ஊர். அந்த ஊரில் இருந்த சிலர் கடலில் மீன் பிடிக்கச் சென்று, நீண்ட நாள்கள் ஆகியும் திரும்பி வராததால், அவர்களுடைய வீட்டில் உள்ள அவர்களது தாய்மார்களும் மனைவிமார்களும் கடற்கரைக்கு வந்து, அவர்களை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் அவ்வூரை நோக்கிக் கப்பல் வருவதைப் பார்த்துவிட்டுக் கடற்கரையில் இருந்தவர்கள், மீன்பிடிக்கப் போனவர்கள் பத்திரமாகத் திரும்பி வருகின்றார்கள் என்று மகிழ்ந்து ஆர்ப்பரிக்கத் தொடங்கினார்கள். இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் கப்பலில் வந்தவர்கள் தங்களிடம் இருந்த தொலைநோக்கியை வைத்து, தங்களுடைய வீட்டிலுள்ளவர்கள் இருக்கின்றார்களா? என்று பார்த்தார்கள்

கப்பலில் இருந்த எல்லாருடைய வீட்டிலிருந்தும் ஏதாவதோர் ஆள் இருக்கும்போது, ஒரே ஒருவருடைய வீட்டிலிருந்து மட்டும் யாருமே இல்லை. அவருக்குத் திருமணமாகிச் சில நாள்கள்தான் ஆகியிருந்தன. அதனால் அவர் தன் மனைவிக்கு என்ன ஆயிற்றோ! என்று பதற்றமடையத் தொடங்கினார்.

கப்பல் சிறிது நேரத்தில் கரையை அடைந்தது. அவர்களைப் பார்த்த அவர்களது வீட்டில் இருந்தவர்கள் மகிழ்ந்து ஆரவாரம் செய்தார்கள். தன்னுடைய வீட்டிலிருந்து மட்டும் யாருமே வரவில்லையே என்ற வருத்ததத்தில், புதிதாகத் திருமணமானவர் தன்னுடைய வீட்டிற்குச் சென்றபோது, அவரது மனைவி அவருக்குப் பிடித்த உணவினைத் தயாரித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் தன் மனைவியிடம், “மற்ற எல்லாரையும் போல் நீ ஏன் கடற்கரைக்கு வரவில்லை?” என்று கேட்டதற்கு, அவர், “மற்றவர்கள் நீங்களெல்லாம் வருவீர்களா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் மட்டும்தான் உங்களுடைய வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். அதனால்தான் உங்களுக்குப் பிடித்த உணவினைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன்” என்றார். அதைக் கேட்டதும் அவரது கணவர் பெரிதும் மகிழ்ந்தார்.

ஆம், இந்தப் பெண்மணி எப்படித் தனது கணவருக்காகக் காத்துக்கொண்டிருந்தாரோ, அப்படி நாமும் மானிட மகனுடைய வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கவேண்டும். இன்றைய இறைவார்த்தை மானிட மகனுடைய வருகைக்காகத் தலைநிமிர்ந்து நில்லுங்கள் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

எருசலேம் திருக்கோயிலின் அழிவைப் பற்றிப் பேசும் இயேசு, தொடர்ந்து எருசலேம் திருநகரின் அழிவையும், அதையடுத்து உலகின் ஏற்படும் மாற்றங்களையும் பற்றிப் பேசுகின்றார்.

எருசலேமானது கி.மு. 586 ஆம் ஆண்டிலிருந்தே அன்னியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இயேசு வாழ்ந்த காலத்தில் அது உரோமையரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்நிலையில் இன்றைய முதல் வாசகம், எருசலேம் திருநகர் அன்னியரின் கொட்டத்திலிருந்து விடுவிக்கப்படும்; அந்த நாடுகள் உரிய தண்டனையைப் பெறும் என்கிறது.

இவையெல்லாம் நிகழும்போது மானிட மகன் மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் வருவார் என்று நற்செய்தியில் இயேசு கூறுகின்றார். அதனால் நாம் உலகில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு கலங்கிடாமல், மானிட மகனின் வருகை நெருங்கி வந்துவிட்டது என்று நம்பிக்கையோடு அவருக்காக விழிப்பாகவும் ஆயத்தமாகவும் காத்திருப்போம்.

சிந்தனைக்கு:

 கடவுளுக்காகக் காத்திருப்போர் கைம்மாறு பெறாமல் போகார்.

 மானிட மகனுடைய வருகை நல்லோருக்கு ஆசியாகவும் தீயோனுக்குத் தண்டனையாகவும் அமையும்.

 நாம் விழிப்பாய் இருக்கும் பணியாளராய் வாழ முயற்சி செய்வோம்.

இறைவாக்கு:

‘நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்’ (திபா 1:6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் நேர்மையாய் வாழ்ந்து, - மானிட மகனிடமிருந்து – இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.