23 செப்டம்பர் 2022, வெள்ளி

கொலை செய்யப்படவும் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்

பொதுக் காலத்தின் இருபத்து ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை


I சபை உரையாளர் 3: 1-11
II லூக்கா 9: 18-22

கொலை செய்யப்படவும் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்

மலிவு விலையில் சிலுவை:


அது ஒரு பெரிய திருத்தலம். அந்தத் திருத்தலத்திற்கு முன்பாக மெழுகுதிரிகள், புனிதர்கள் மற்றும் இயேசுவின் திருவுரும் தாங்கிய படங்கள், சிலுவைகள், மந்திரிக்கப்பட்ட கயிறுகள், முதலியவற்றை வைத்துச் சிலர் விற்றுக் கொண்டிருந்தார்கள். அது புனித வாரம் என்பதால் மக்களும் அவற்றை ஆர்வமாய் வாங்கிச் சென்றார்கள்.

இவற்றுக்கு நடுவில் ஒரு வியாபாரி தன்னுடைய வியாபாரம் அமோகமாக நடைபெற வேண்டும் என்பதற்கு, “இங்கு மலிவு விலையில் சிலுவை கிடைக்கும்” என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார். இதைத் தற்செயலாக அப்பக்கமாய் வந்த கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட பெரியவர் ஒருவர் கேட்டு, அதிர்ந்து போய்க் குறிப்பிட்ட அந்த வியாபாரியிடம், “சிலுவை விலை மலிவானது அல்ல; அது விலை மதிப்பில்லாதது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

ஆம், ஆண்டவர் இயேசு சிலுவையில் கொலையுண்டதால் அது மலிவானது அல்ல; விலை மதிப்பானது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியில் இயேசு, தான் சிலுவையில் அறையுண்டு கொல்லப்படவும், மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவேண்டும் என்கிறார். அவர் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததால் அவமானத்தின் சின்னமாகக் கருதப்பட்ட சிலுவை வெற்றியின் சின்னமாக, விலைமதிக்கப் பெறாததாக ஆனது. இயேசு ஏன் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட வேண்டும் என்பது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இறைவாக்கினர் எசாயா நூலில், கடவுளின் எண்ணங்கள் மனித எண்ணங்கள் அல்ல, மனிதரின் வழிமுறைகள் கடவுளின் வழிமுறைகள் அல்ல (எசா 55:8) என்று நாம் வாசிப்போம். இதையே சபை உரையாளர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், அதன் ஆசிரியர் “கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது” என்பார். இது முற்றிலும் உண்மை இதைத் தெளிவுபடுத்துகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு, மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள் என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, அதன்பிறகு நீங்கள் நான் யாரெனச் சொல்கிறீர்கள் என்ற கேள்வியைச் சீடரிடம் கேட்க, பேதுரு, “நீர் கடவுளின் மெசியா” என்கிறார். உடனே இயேசு, “இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தனது பாடுகளையும் உயிர்ப்பையும் முன்னறிவிக்கின்றார்.

இயேசு ஏன் பாடுகள் பட வேண்டும் என்பது சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்திருக்கும். அவர்களின் எண்ணமெல்லாம் மெசியாவாம் இயேசு உரோமையர்களிடமிருந்து தங்களுக்கு விடுதலை அளித்து, எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்வார் என்பதாகவே இருந்தது. ஆனால், இயேசு யூதர்கள் எதிர்பார்த்தது போல, அரசியல் மெசியா அல்ல, மாறாக, அவர் துன்புறும் ஊழியன். கோதுமை மணி போல் மண்ணில் விழுந்து மடிந்தால்தான், அல்லது அவர் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டால்தான் தந்தையின் திருவுளமான உலகை மீட்க முடியும். எனவேதான் சிலுவைச் சாவுக்குத் தன்னையே கையளிக்கின்றார் இயேசு.

கடவுளின் திருவுளம் சில சமயங்களில் நமக்குப் புரியாத புதிராக இருக்கலாம். ஆனால், நாம் இயேசுவைப் போன்று கடவுளின் திருவுளத்திற்கு நம்மைக் கையளித்தால், அவரது ஆசியைப் பெறலாம். இதை நாம் நம்முடைய வாழ்க்கையில் உணர்வு செயல்படுவோம்.

சிந்தனைக்கு:

 கடவுளின் திருவுளம் நம் வழியாகச் சிறப்புறச் செய்வோம்.

 நம்முடைய விருப்பத்தின்படி நடப்பதற்கு நாம் எதையும் இழக்கத் தேவையில்லை. ஆண்டவர் விருப்பத்தின்படி நடக்கின்றபோதுதான் நாம் நிறைய இழக்க வேண்டியிருக்கும். ஆனாலும் அது இழப்பே அல்ல.

 சிலுவைகள் இன்றி சிம்மாசனம் இல்லை.

இறைவாக்கு:

‘இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை’ (உரோ 8: 18) என்பார் புனித பவுல். எனவே, நாம் இயேசுவைப் போன்று, நமது வாழ்வில் துன்பம் வாந்தாலும், கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.