23 செப்டம்பர் 2022, வெள்ளி

“என் கற்பாறையும் கோட்டையும் அவரே!”

பொதுக் காலத்தின் இருபத்து ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை


திருப்பாடல் 144: 1a, 2a-c, 3-4 (1a)

“என் கற்பாறையும் கோட்டையும் அவரே!”

அடைக்கலப் பாறை:


விவசாயி ஒருவர் தனது விளைநிலத்திற்கு நடுவில் குடிசை அமைத்து, அங்கு தனது மனைவி மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். வழக்கத்திற்கு மாறாக, அந்த ஆண்டு, அவருடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது. அதனால் அவர் அறுவடைக்காக ஆவலோடு காத்திருந்தார்.

அறுவடைக்கு முந்தைய நாள் இரவில், புயலும் மழையும் வந்து அவருடைய விளைநிலத்தைப் பாழாக்கிவிட்டுப் போயின. மறுநாள் காலையில், அவர் தன்னுடைய மகனுடன் விளைநிலத்தைப் பார்த்தார். மகனுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. அதே நேரத்தில் அவன் தன் தந்தை பாழாய்க் கிடக்கும் விளைநிலத்தைப் பார்த்து என்ன சொல்லப் போகிறாரோ? என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவர், “அடைக்கலப் பாறையான ஆண்டவரே! இந்தப் புயல் மழையிலும் எனக்கும் என் மனைவி, மகனுக்கும் எதுவும் ஆகாமல் காத்துக்கொண்டீரே! அதற்கு உமக்கு நன்றி! தொடர்ந்து எம்மை அடைக்கலப் பாறையாக இருந்து காத்துக்கொள்ளும்” என்றார். இவ்வார்த்தைகள் மகனுடைய உள்ளத்தில் இருந்த வருத்தத்தைப் போக்கி, நம்பிக்கையை ஊட்டின.

ஆம், புயல் மழையால் தன் விளைநிலமே பாழாய்ப்போயிருந்தாலும், தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் ஆண்டவர் அடைக்கலப் பாறையாக இருந்து காத்ததற்காக அந்த விவசாயி ஆண்டவருக்கு நன்றி சொன்னார். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப் பாடலில் தாவீது, ஆண்டவர் அடைக்கலப் பாறையாக இருந்து தன்னைக் காத்ததற்காக அவரைப் போற்றிப் புகழ்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

எதிரிகளிடமிருந்து ஆண்டவர் தன்னை காத்ததற்கு நன்றியாகத் தாவீது பாடுகின்ற நன்றிப்பாடல்தான் இன்று நான் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 144. இத்திருப்பாடலில் வருகின்ற முதல் எட்டு இறைவார்த்தையும், திருப்பாடல் 18, 1 முதல் 15 வரையுள்ள இறைவார்த்தையும் நிறையவே ஒத்துப் போகின்றன

இஸ்ரயேலின் அரசராக இருந்த தாவீதுக்கு முதலில் சவுலிடமிருந்தும், பின்னர் எதிரிகளிடமிருந்தும், அதன்பின்னர் அவருடைய சொந்த மகன் அப்சலோமிருந்தும் ஆபத்துகள் வந்த வண்ணமாய் இருந்தன. அத்தகைய வேளையில், தாவீது ஆண்டவரே தன்னுடைய அடைக்கலப் பாறை (திபா 19:14, 31:3, 42:9, 62:3, 71:3, 89:26, 92:15, 95:1) என்று ஆண்டவரிடம் தஞ்சம் அடைந்தார். ஆண்டவரும் அவரை எதிரிகளிடமிருந்தும் எல்லா வகையான ஆபத்துகளிலிருந்தும் காத்தார். அதனால்தான் தாவீது, “என் கற்பாறையும் கோட்டையும் அவரே!” என்கிறார்.

தாவீதை ஆண்டவர் எதிரிகளிடமிருந்து காத்தது போல, நம்மையும் அவர் பலவிதமான ஆபத்துகளிலிருந்து காத்திருப்பார். அதற்கு நன்றியாக நாம் அவரைப் போற்றுவோம்.

சிந்தனைக்கு:

 நம்முடைய உயிருக்கு அடைக்கலமாக இருக்கும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்வோம்.

 .கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆசிகளுக்கு அவருக்கு நன்றி செலுத்துவதே முறை

 ஆண்டவர்மீது நம்பிக்கை வைப்போருக்கு அவர் வலுவூட்டுகின்றார்.

இறைவாக்கு:

‘கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?’ (உரோ 8:31) என்பார் புனித பவுல். எனவே, கடவுள் நம் சார்பாக இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு, அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.