14 சனவரி 2019, திங்கள்

முதல் வாரம் - திங்கள்

முதல் வாரம் - திங்கள் - முதல் ஆண்டு

 

முதல் வாசகம்

கடவுள் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6

பல முறை, பல வகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.

கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். இவ்வாறு இறைமகன் வானதூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார்.

அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார். ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது ``நீ என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்'' என்றும், ``நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார்'' என்றும் எப்போதாவது கூறியதுண்டா?

மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, ``கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக'' என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 97: 1,2b. 6,7உ. 9 (பல்லவி: 7உ)

பல்லவி: அனைத்துத் தெய்வங்களே! ஆண்டவரைத் தாழ்ந்து பணியுங்கள்.

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2b நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. 7உ அனைத்துத் தெய்வங்களே! அவரைத் தாழ்ந்து பணியுங்கள். பல்லவி

9 ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தரப்பட்டுள்ள நற்செய்திக்கு முன் வரும் அல்லேலூயா வசனத்திற்குப் பதிலாக இந்நூலின் இறுதிப்பகுதியில் இடம்பெற்றுள்ள அல்லேலூயா வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்.

 

நற்செய்தி வாசகம்

மனம் மாறி, நற்செய்தியை நம்புங்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20

அக்காலத்தில் யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். ``காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்'' என்று அவர் கூறினார்.

அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது, சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, ``என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார்.

உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது, செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின்சென்றார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

சிந்தனை

நற்செய்தியின் மையக் கருத்தாகிய மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். காலம் நிறைவேறி விட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்ற இறைவாக்கு இன்று நமக்கு அரளப்பட்டுள்ளது.