11 சனவரி 2019, வெள்ளி

ஜனவரி 11

ஜனவரி 11

 

1யோவான் 5:5-13

 

இயேசுவை இறைமகன் என நம்புவோர் வாழ்வடைவர்

 

நிகழ்வு

 

         தன்னுடைய ஆற்றல் மிக்க எழுத்தாலும் பேச்சாலும் பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டவர் வால்டர் (Valtaire). நாத்திகரான அவர், கடவுளையும் திருச்சபையையும் திருத்தந்தையையும் அறவே வெறுத்து வந்தார். இது மட்டுமல்லாமல், “இன்னும் இருபது ஆண்டுகளில் கிறிஸ்தவ மதத்தைக் கூண்டோடு அழித்துவிடுவேன்” என்று கொக்கரித்தார்.

 

ஆனால், இருபது ஆண்டுகளுக்குக்குள்ளாகவே வேறொன்று நடந்தது. ஆம், இருபது ஆண்டுகளுக்குள் கிறிஸ்தவ மதத்தையே அழித்துவிடுவேன் என்று சவடால் விட்ட வால்டர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். அவர் இறப்பதற்கு முன்பாக ஒரு குருவானரை அழைத்து, தான் செய்த தவறுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்டார். அது மட்டுமல்லாமல்,  மாற்கு நற்செய்தி 14:21 ல் வருகின்ற இறைவார்த்தையை மேற்கோள் காட்டி “நான் பிறவாதிருந்தால் நலமாய் இருந்திருக்கும்” என்று கண்ணீர் சிந்தி உயிர்துறந்தார்.

 

கடவுள்மீது நம்பிக்கை இல்லாமல், அவரைப் பற்றி அவதூறாகப் பேசுவோருடைய கதி எப்படி இருக்கின்றது என்பதற்கு வால்டரின் வாழ்க்கை ஒரு சான்று. இதற்கு மாறாக நாம் கடவுளிடத்தில் நம்பிக்கை கொண்டு, இயேசுவை இறைமகன் என ஏற்றுக்கொண்டு வாழ்கின்றபோது நிலைவாழ்வடைவோம்

 

இயேசுவே இறைமகன்

 

         இன்றைய முதல் வாசகத்தில் யோவான், “இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?” என்கின்றார். யோவான் இவ்வாறு எழுதுவதற்கான காரணத்தை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். யோவானின் காலத்தில் ஒருசிலர் இயேசு, மரியாவின் வயிற்றில் பிறந்த ஒரு சாதாரண மனிதனே என்று சொல்லிவந்தார்கள். இத்தகைய சூழலில்தான் யோவான், இயேசு இறைமகன் என்று சான்றுகளோடு எடுத்துரைக்கின்றார்.

 

இயேசு இறைமகன் என்பதற்கான மூன்று சான்றுகள்

 

         இயேசு இறைமகன் எனச் சொல்லும் யோவான், தொடர்ந்து சொல்கின்றார், “நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டுமல்ல, நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கின்றார். தூய ஆவியாரே உண்மை” என்று. ஆம், இயேசு கிறிஸ்து இறைமகன் என்பதை நிரூபிப்பதற்கு நீர், இரத்தம், தூய ஆவியார் என்ற மூன்று சான்று நமக்கு முன்பாக இருக்கின்றன.

 

வழக்கமாக யூதர்கள் ஒருவருடைய சான்றினை ஏற்றுக்கொள்வது கிடையாது. ஒரு செயல் உண்மை என்று நிருபிப்பதற்கு இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட சான்றுகள் தேவைப்படும் (இச 19:15). அந்த வகையில் பார்க்கும்போது, இயேசு இறைமகன் என்று உறுதியாகச் சொல்வதற்கு மூன்று சான்றுகள் இருப்பது பெருமையே.

 

இப்போது இந்த மூன்று சான்றுகளும் இயேசுவை எப்படி இறைமகன் என நிரூபிக்கின்றன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

 

இயேசு யோர்தான் ஆற்றில், திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெறுகின்றபோது, வானத்திலிருந்து தந்தையாம் கடவுள், “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்கின்றார் (மத் 3:17). இங்கே தண்ணீரானது இயேசு இறைமகன் என்பதை எடுத்து இயம்புவதாக இருக்கின்றது.

 

அடுத்ததாக, யோவான் நற்செய்தியில் இயேசு, “தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்” என்பார். அப்போது வானிலிருந்து தந்தைக் கடவுளின் குரல், “மாட்சிப்படுத்துவேன், மீண்டும் மாட்சிப்படுத்துவேன்” என்று சொல்லும் (யோவான் 12:28). இங்கே தந்தைக் கடவுள் இயேசுவை மாட்சிப்படுத்துவதாகச் சொல்வது, சிலுவையில் இரத்த வெள்ளத்தில் மாட்சிப்படுத்துவதைக் குறிப்பதாக இருக்கின்றது. இயேசு சிலுவையில் இரத்தம் சிந்தி உயிர்துறக்கின்றபோது, அங்கே நின்றுகொண்டிருக்கும் நூற்றுவத் தலைவனோ, “இவர் உண்மையான் இறைமகன்” என்பார் (மத் 27:54). ஆகையால், இயேசு சிந்திய இரத்தம் அவர் இறைமகன் என சான்று பகர்கின்றது என்று உறுதியாகச் சொல்லலாம்.

 

நிறைவாக, தூய ஆவியார், இயேசு இறைமகன் எனச் சான்றுபகர்கின்றார். யோவான் நற்செய்தி 15:26 ல் வாசிக்கின்றோம், “துணையாளர் வரும்போது அவர் இயேசுவைப் பற்றிச் சான்றுபகர்வார்” என்று. தூய ஆவியார் எப்படிச் சான்று பகர்வார் எனில், அவர் அவர் வழி நடக்கின்ற ஒவ்வொருவரின் வழியாக, சீடர்களின் வழியாக இயேசு இறைமகன் எனச் சான்று பகர்வார்.

 

எனவே, நீர், இரத்தம், தூய ஆவியார் என்ற இந்த மூன்று சான்றுகளின் மூலம் இயேசுவை இறைமகன் என எந்தவொரு தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்ளலாம்.

 

சிந்தனை

 

         இயேசுவை இறைமகன் என நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யாரெனச் சொல்லும் யோவான், அப்படி நாம் இயேசுவை இறைமகன் என ஏற்றுக்கொண்டால் நிலைவாழ்வைப் பெறுவோம் என்றும் சொல்கின்றார்.

 

எனவே, இயேசுவே இறைமகன் என நம்பி ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

  • மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.