29 மே 2023, திங்கள்

நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் தாய்

புனித கன்னி மரியா, திருஅவையின் அன்னை
(மே 29)


I தொடக்க நூல் 3: 9-15, 20

திருப்பாடல் 87: 1-2, 3, 5, 6-7

II யோவான் 19: 25-27

நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் தாய்

தாயின் பாதுகாவலில் நம்மை ஒப்படைப்போம்


நேற்றைய நாளில் பெந்தக்கோஸ்துப் பெருவிழாவைக் கொண்டாடினோம். அன்றைய நாளில்தான் தூய ஆவியார் சீடர்கள்மீது இறங்கி வந்தார். அதே நேரத்தில் கிறிஸ்துவின் மறையுடலாம் திருஅவையும் பிறந்தது. அந்தத் திருஅவையை ஒரு தாய்க்குரிய கரிசனையுடன் மரியா வழிநடத்தியதால், அவரைத் திருஅவையின் அன்னை எனச் சொல்லலாம்.

முன்னதாக, இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது தனது தாய் மரியாவிடம் யோவானைச் சுட்டிக்காட்டி, “அம்மா! இவரே உம் மகன்” என்று கூறியிருப்பார். அதைப் பற்றி நாம் இன்றைய நற்செய்தியில் வாசகத்தில் வாசிக்கலாம். இங்கே யோவான் தனியாள் அல்ல, இயேசுவின்மீது நம்பிக்கை கொண்ட அனைவரையும் அல்லது திருஅவையைக் குறிக்கின்றார். அந்த வகையில் மரியாவை நாம் திருஅவையின் அன்னை எனச் சொல்லலாம்.

இன்றைய முதல் வாசகத்தில் முதல் பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறி, விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டு பாவம் செய்ததால், கடவுள் அவர்களையும் அலகையையும் தண்டிக்கின்றார். அந்த நிகழ்விற்குப் பிறகு மனிதன் தன் மனைவிக்கு உயிருள்ளோர் எல்லாருக்கும் தாய் எனப் பொருள்படும் ஏவாள் எனப் பெயரிடுகின்றான். ஏவாள் கடவுளின் கட்டளையை மீறியிருக்கலாம், மரியாவோ கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து, புதிய ஏவாளாய்த் திகழ்ந்து எல்லாருக்கும் தாயாகின்றார். இதனால் இன்றைய நாளில் நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் இடம்பெறுவது போல், மரியா எல்லாராலும் மேன்மை மிக்கவராய்ப் போற்றப்படுகின்றார்.

மரியா ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடித்து திருஅவைக்கும்; ஏன், நம் அனைவருக்கும் தாயாகத் திகழ்கின்றார். அவரின் முன்மாதிரியைப் பின்பற்றி, நாம் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வோம்.

என் தாயே உலகின் ஒளி

ஒரு பங்கில் ஞாயிறு மறைக்கல்வி மாணவர்களுக்கு மனப்பாடப் போட்டி நடைபெற்றது. போட்டிக்காக அவர்களுக்கு யோவான் நற்செய்தியில் இயேசு பேசும் “நானே...” என்று தொடங்கும் இறைவாக்குப் பகுதியானது கொடுக்கப்பட்டது

போட்டி தொடங்கி எல்லாருக்கும் கொடுக்கப்பட்ட இறைவாக்குப் பகுதியை நன்றாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு சிறுவன் மட்டும் சொல்லவேண்டிய இறைவாக்குப் பகுதியைப் பாதிலேயே மறந்து போனான் அப்போது அவனுக்கு முன்னால் இருந்த அவனுடைய தாய் அவனுக்கு எடுத்துக் கொடுத்தார். அப்படியிருந்தும் அவனால் சொல்ல முடியாததால், அவனுடைய தாய், அவனருகில் சென்று, “நானே உலகின் ஒளி” என்று சொல்லிவிட்டுத் திரும்பி வந்தார்.

அவர் திரும்பி வந்ததும் சிறுவன், “என் தாயே உலகின் ஒளி” என்றான். அதைக் கேட்டு எல்லாரும் அவனை வியப்புடன் பார்த்தார்கள்.

இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவன் அறியாமையில் சொன்னாலும், ஒவ்வொருவருக்கும் அவருடைய தாய்தான் ஒளியாக, விளக்காக இருக்கின்றார் என்பதுதான் உண்மை. மரியா நம் அனைவருக்கும் தாய் என்பதால், அவரே, நமக்கு ஒளியாக இருந்து, நம்மை வழி நடத்துகின்றார் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆன்றோரின் வார்த்தை

“அன்னை என்றால், உன் அன்னை என் அன்னை என்ற வேறுபாடெல்லாம் இல்லை. ஒரே அன்னைதான்” – லா.சா.ரா (பிரபல தமிழ் எழுத்தாளர்)

தீர்மானங்கள்

1) அன்னையின் மரியாவின் பாதுகாவலில் நம்மை ஒப்புக் கொடுப்போம்.

2) கடவுள் நமது விண்ணகத் தந்தை, நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகள் என்பதால் நம்மிடம் இருக்கும் பிரிவினைகளைக் களைவோம்.

3) அன்னை மரியா சொல்வது போல், இயேசு சொல்வதையெல்லாம் செய்வோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.