25 மார்ச் 2023, சனி

கடவுளின் திருவுளத்திற்குத் தன்னையே கையளித்தவர்

ஆண்டவரின் பிறப்பின் அறிவிப்பு பெருவிழா (மார்ச் 25)


I எசாயா 7: 10-14; 8:10b
II எபிரேயர் 10: 4-10
III லூக்கா 1: 26-28

கடவுளின் திருவுளத்திற்குத் தன்னையே கையளித்தவர்

நாம் யாருக்கு அடிமை?


இந்த உலகில் எத்தனையோ மன்னர்கள் தோன்றி மறைந்திருக்கின்றார்கள். அவர்களின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டிருக்கின்றதா? என்றால், இல்லை என்றுதான் பதில் வரும்; ஆனால், மனிதன் பாவம் செய்து, கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தபோதே, இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பட்டது (தொநூ 3:15). கால ஓட்டத்தில் இயேசு எப்படிப் பிறப்பார் (எசா 7:14), எங்கே பிறப்பார் (மீக் 5:2) என்பன போன்ற செய்திகள் வழங்கப் பட்டுக்கொண்டே வந்தன. முடிவில் அவர் மரியின் வயிற்றில் மகனாகப் பிறந்தார்.

உலகை மீட்க வேண்டும் என்ற தன்னுடைய திட்டத்தில் மனிதர்கள் பங்கு பெற வேண்டும் என்று கடவுள் பெரிதும் விரும்பினார். பெரிய பெரிய மனிதர்களெல்லாம் கடவுளின் மீட்புத் திட்டத்தில் பங்கு கொள்ளத் தயாராகவில்லை. இன்றைய முதல் வாசகத்தில் ஆகாசு மன்னனைப் பற்றி வாசிக்கின்றோம். இவன் ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்காமல், வேற்று நாட்டவர்மீது நம்பிக்கை வைத்திருந்தான். அப்படியிருந்தும் அவனுக்கு ஆண்டவர்தாமே ஓர் அடையாளத்தைத் தருகின்றார். அவனோ கடவுளின் வார்த்தைக்குச் செவி கொடுக்கவே இல்லை.

இதற்கு முற்றிலும் மாறாக, நாசரேத்து என்ற சாதாரண ஒரு சிற்றூரைச் சேர்ந்த மரியாவைத் தன்னுடைய மீட்புத் திட்டத்தில் பங்குகொள்ளக் கடவுள் அழைக்கும்போது, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படி எனக்கு நிகழட்டும்” என்று தன்னை முற்றிலுமாகக் கையளிக்கின்றார். மரியா கடவுளின் மீட்புத் திட்டத்தில் பங்கேற்றதால் உடலளவில் மறைச்சாட்சிகளைப் போன்று துன்பங்களை அனுபவிக்காவிட்டாலும், உள்ளத்தளவில் நிறையவே துன்பங்களை அனுபவித்தார்; மேலும் கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறத் தன் உள்ளத்தை வாள் ஊடுருமாறு செய்தார்.

மரியா கடவுளின் மீட்புத் திட்டத்திற்குத் தம்மையே கையளித்தது, இன்றைய இரண்டாம் வாசகம் மற்றும் பதிலுரைப்பாடலில் வருகின்ற, “இறைவா, இதோ, உம் திருவுளம் நிறைவேற்ற நான் வருகின்றேன்” என்ற வார்த்தைகளை நிறைவு செய்வதாக இருக்கின்றது. இவ்வார்த்தைகள் இயேசுவுக்கு மிகவும் பொருந்துபவையாக இருந்தாலும், மரியாவுக்கும் நன்றாகவே பொருந்துகின்றன

கடவுளின் திருவுளம் ஒன்றே நமது இலக்கு, அதை நிறைவேற்ற ஒவ்வொருவரும் மரியாவைப் போன்று தயாராக இருக்கவேண்டும் ஆகையால், நாம் மரியாவைப் போன்று கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்கு நம்மையே நாம் கையளிக்க முன் வருவோம். அப்போது கடவுள் நம்மைப் பல மடங்கு உயர்த்துவார்.

ஒரு தாயின் ஆசை

“உரோமை நகரம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தான்” என்ற வாசகம் மிகவும் பிரபலமானது.

இந்த நீரோ மன்னன் இளைஞனாக இருந்தபோது இவனுடைய தாய் அக்ரிப்பினாவிற்கு ஓர் ஆசை வந்தது. தன்னுடைய மகனை அரியணையில் அமர்த்திப் பார்ப்பதுதான் அந்த ஆசை. இது பற்றி இவர் ஆருடம் சொல்பவர்களிடம் போய்க் கேட்டபோது, “உன் மகன் அரியணை ஏறும்பட்சத்தில் அவன் உன்னைக் கொன்று போடுவான்” என்றார்கள். அதற்கு அக்பிரிப்பினா, “என் மகன் அரியணை ஏறவேண்டும். அதற்காக அவன் என்னைக் கொன்று போட்டாலும் பரவாயில்லை” என்றார். முடிவில் அவர் சொன்னதுபோன்றே நடந்தது.

நீரோ மன்னனின் அன்னை அக்ரிப்பினாவைப் போன்று மரியாவிற்குத் தன் மகனை மன்னராக்கிப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆசை இருந்தததில்லை. ஏனெனில், அவர் ஏற்கெனவே பெரியவர். உன்னதக் கடவுளின் மகன். அவரது ஆட்சிக்கு முடிவே இல்லை. மரியா இயேசுவுக்காகத் செய்ததெல்லாம், அவரோடு ஒன்றிணைந்து கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றியதுதான். இதனால் கடவுள் மரியாவை எல்லாத் தலைமுறையினராலும் பேறுபெற்றவர் என அழைக்கும்படி செய்தார்.

நாம் மரியாவைப் போன்று கடவுளின் திருவுளம் நிறைவேறச் செய்வோம். அப்போது கடவுள் நம்மை மிகவும் உயர்த்துவார்.

ஆன்றோரின் வார்த்தை

“ஆண்டவராகிய கடவுள் தண்ணீர் அனைத்தையும் சேர்த்து, அதனைக் கடல் என்று அழைத்தார். அவரே அருள்கொடைகள் அனைத்தையும் சேர்த்து, அதனை மரியா என்று அழைத்தார்” – புனித லூயிஸ் தெ மரிய மான்போர்ஃட்.

தீர்மானங்கள்

1) நம்முடைய விருப்பங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றத் தயாராவோம்.

2) கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் மரியாவே நமக்குச் சிறந்த முன்மாதிரி என்பதால், அவர் காட்டும் பாதையில் நடப்போம்.

3) கடவுள் தந்த இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள வகையில் வாழ்வோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்