01 நவம்பர் 2022, செவ்வாய்

கடவுளின் மக்கள்

புனிதர் அனைவர் பெருவிழா
நவம்பர் 01


I திருவெளிப்பாடு 7: 2-4,9-14
II 1 யோவான் 3: 1-3
III மத்தேயு 5: 1-12a

கடவுளின் மக்கள்

நிகழ்வு


ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்தவர் பெலிக்ஸ் அட்லர் (Felix Adler 1851-1933). மிகப்பெரிய சிந்தனையாளரும் எழுத்தாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான இவர் கதாநாயகன் யார், புனிதர் யார் என்பதற்கு இப்படியொரு விளக்கத்தைக் கொடுக்கின்றார்: “காதாநாயகன் என்பவர் பெரிய பெரிய ஒளி விளக்குகளை அமைத்து, இவ்வுலகின் இருளைப் போக்குகின்றவர். புனிதர் என்பவரோ தாமே ஒளியாய் இருந்து, இவ்வுலகின் இருளைப் போக்குகின்றவர்.”

ஆம், புனிதர் என்பவர் பெலிக்ஸ் அட்லர் சொல்வது போல், நம் ஆண்டவர் இயேசு சொல்வது போல் உலகிற்குக் ஒளியாய் இருப்பவர். இப்படித் தங்கள் வாழ்வாலும் வார்த்தையாலும் உலகிற்கு ஒளியாய் இருந்த அனைவரையும், திருஅவை ‘புனிதர் அனைவர்’ என்ற பெயரில் பெருவிழா எடுத்துக் கொண்டாடுகின்றது. இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன, நாமும் புனிதர்கள் கூட்டத்தில் இடம்பெற என்ன செய்வது என்பன குறித்துச் சிந்திப்போம்.

யார் வேண்டுமானாலும் புனிதர் ஆகலாம்!

ஓர் ஆண்டில் 365 அல்லது 366 நாள்கள்தானே உள்ளன, இந்த 366 நாள்களுக்குள் எல்லாப் புனிதர்களையும் நினைவுகூர முடியாதே! அப்படியானால் எல்லாப் புனிதர்களையும் நினைவுகூர்வதற்கு ஏற்படுத்த பெருவிழாதான் புனிதர் அனைவர் பெருவிழா. இப்பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற முதன்மையான செய்தி, யாரும் புனிதராகலாம் என்பதுதான்.

இன்றைக்குப் பல இடங்களில் எல்லா சமூகத்தாராலும் ஊராட்சி மன்றத் தலைவராகிவிட முடிவதில்லை அல்லது எல்லா சமூகத்தாராலும் இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துவிட முடிவதில்லை. அதற்கென்று எழுதப்படாத சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன; ஆனால், புனிதராவதைப் பொறுத்தவரையில் இதுபோன்ற எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. ஒருவர் எந்த நாட்டைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த குலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், இந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும்; ஏன், எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும் அவரால் புனிதராக முடியும். இதை திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் தெளிவாக விளக்குகின்றது.

“இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினங்களையும் மொழியையும் சார்ந்தவர்கள்” என்று இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற வார்த்தைகள் ஒருவர் எந்த நாட்டைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும், அவரால் புனிதராக முடியும் என்கிற உண்மையை உரக்கச் சொல்கின்றது. இதற்கு சான்றாக இருப்பவர்கள்தான் பல நாடுகளைச் சார்ந்த புனிதர்கள். இச்செய்தி நாமும் ஒருநாள் புனிதர் ஆகலாம் என்ற நம்பிக்கையை நமக்குள் விதைக்கின்றது.

புனிதர்கள் கடவுளின் மக்கள்

யார் வேண்டுமானாலும் புனிதர் ஆகலாம் என்கிற நம்பிக்கைச் செய்தியை இன்றைய முதல் வாசகம் தருகின்ற அதே வேளையில், இன்றைய இரண்டாம் வாசகம் புனிதர்கள் என்பதற்கு மற்றொரு பெயரைத் தருகின்றது. அது என்ன பெயர் எனில், ‘கடவுளின் மக்கள்’ என்பதாகும். ஆம், புனிதர்கள் கடவுளின் மக்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு புனிதர்களாக, கடவுளின் மக்களாக இருப்பதற்கு என்ன செய்வேண்டும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கடவுளின் மக்கள் யார்? என்பதற்குப் புனித பவுல் விளக்கம் தருகின்றபோது, “கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள்” (உரோ 8:14) என்பார். ஆம், இன்றைக்குப் பலர் கடவுளின் ஆவியால் இயக்கப்படுவதற்குப் பதில் ஊனியல்பால், அலகையால் இயக்கப்படுகின்றார்கள். ஊனியல்பால் இயக்கப்படுகின்றவர்கள் பரத்தமையிலும் கெட்ட நடத்தையிலும் சண்டை சச்சரவிலும், இன்னும் இது போன்ற செயல்களிலும் ஈடுபடுவார்களே அன்றி வேறு எதையும் செய்யமாட்டார்கள் (கலா 5:19-21). ஆனால், கடவுளின் ஆவியால் இயக்கப்படும் அவரது மக்கள் அப்படிக் கிடையாது. அவர்கள் இவ்வுலகு சார்ந்தவற்றை அல்ல, மேலுலகு சார்ந்தவற்றை நாடுவார்கள். அதனால் அவர்கள் விண்ணகத் திருக்கூட்டத்தில் இடம்பெறுவார்கள்.

இயேசுவே நமக்கு முன்மாதிரி

புனிதர்களுக்கு மற்றொரு பெயர் கடவுளின் மக்கள். அவர்கள் ஊனியல்பால் அல்ல, கடவுளின் ஆவியால் இயக்கப்படுவதாலேயே கடவுளின் மக்களாக இருக்கின்றார்கள் என்று பார்த்தோம் கடவுளின் ஆவியால் இயக்கப்பட்டு, கடவுளின் மகனாவதற்கு அல்லது மகளாவதற்கு இயேசுவே நமக்கு மிகப்பெரிய முன்மாதிரி. ஆம், தூய ஆவியரால் அருள்பொழிவு செய்யப்பட்ட இயேசு (திப 10:38), அந்த ஆவியால் இயக்கப்பட்டதால் கடவுளின் அன்பார்ந்த மகனானார் (மத் 3:17, 17:5). அப்படிப்பட்டவர் நாமும் கடவுளின் மக்களாக மாறுவதற்கு எப்படி வாழவேண்டும் என்று கற்பிக்கின்றார். அப்படி அவர் கற்பிப்பவைதான், ஏழையரின் உள்ளம், துயர், கனிவு, நீதி நிலைநாட்டும் வேட்கை, இரக்கம், தூய்மையான உள்ளம், அமைதி, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுதல் என்ற எட்டுவிதமான பேறுகள். இந்த எட்டுவிதமான பேறுகளின்படி வாழ்கின்றபோது ஒருவர் கடவுள் மகனாக அல்லது மகளாகின்றார் என்பது இயேசு கற்பிக்கும் செய்தி.

இந்த இடத்தில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக் தன்னுடைய Jesus of Nazareth என்ற நூலில் குறிப்பிடுகின்ற செய்தியை நம்முடைய கருத்தில் கொள்வது அவசியம். “மலைப்பொழிவில் இயேசு குறிப்பிடுகின்ற எட்டு விதமான பேறுகளும், அவரது தன்னிலை விளக்கமே” - இதுதான் திருத்தந்தை பதினாறாம் பெனடிக் தன்னுடைய நூலில் குறிப்பிடுகின்ற செய்தியாகும். அப்படியெனில், ஒருவர் இயேசுவைப் போன்று ஏழையரின் உள்ளத்தவராக, துயருறுபவராக, கனிவுடையவராக..... வாழ்கின்றபோது, அவர் கடவுளின் மகனாக, மகளாக மாறுகின்றார் என்பது உறுதி.

இயேசு மலைப்பொழிவில் கற்பிப்பவை இந்த உலக கற்பிப்பதைவிட முற்றிலும் மாறுபட்டதாக இருந்தாலும், அவையே நம்மைக் கடவுள் மக்களாக மாற்றக்கூடியவை. ஆகவே, நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி வாழ்ந்து புனிதர்களாக, கடவுளாக மக்களாக மாறுவோம்.

சிந்தனை:

‘கிறிஸ்துவைப் பின்பற்றித் தூய்மையாய் எத்தனையோ ஆண்களும் பெண்களும் வாழ்ந்திருக்க, நான் ஏன் வாழக்கூடாது’ (சுயசரிதை 8:27) என்பார் புனித அகுஸ்தின். ஆகையால், நாம் கிறிஸ்துவைப் பின்பற்றித் தூய்மையாய் வாழ்ந்து, புனிதர்களாய், கடவுளின் மக்களாய், பேறுபெற்றவர்களாய் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

வாசகங்கள்



பிற நாட்கள்