முதல் வாசகம்
மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 2: 10-13
மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன் என்கிறார் ஆண்டவர். அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்; நீங்களும், படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
ஆண்டவர் யூதாவைப் புனித நாட்டில் தமக்குரிய பங்காக உரிமைச் சொத்தாக்கிக் கொள்வார். எருசலேமை மீண்டும் தேர்ந்துகொள்வார். மானிடரே, நீங்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் அமைதியாய் இருங்கள்; ஏனெனில் அவர்தம் புனித இடத்திலிருந்து எழுந்தருளினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
லூக் 1: 47. 48-49. 50-51. 52-53. 54-55பல்லவி: என்றும் வாழும் தந்தையின் மகனைச் சுமந்த மரியே, நீர் பேறுபெற்றவர்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 11: 28அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
தம் சீடர் பக்கம் கையை நீட்டி, என் தாயும் சகோதரர்களும் இவர்களே என்றார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50
அக்காலத்தில்
மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, “அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்” என்றார்.
அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, “என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.