முதல் வாசகம்
துன்பம் நிறைந்த போராட்டத்தை மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 32-36
சகோதரர் சகோதரிகளே,
முன்னைய நாள்களை நினைவுகூருங்கள். நீங்கள் ஒளி பெற்ற பின் உங்களுக்கு நேரிட்ட துன்பம் நிறைந்த போராட்டத்தை மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள். சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, வேடிக்கைப் பொருளானீர்கள். வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள்.
கைதிகளுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோதும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டீர்கள். ஏனெனில் சிறந்த, நிலையான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்பதை அறிவீர்கள். உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டு விடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மன உறுதி தேவை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 5)பல்லவி: கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யாக் 1: 12அல்லேலூயா, அல்லேலூயா! சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறு பெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும் போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றி வாகையினை அவர்கள் பெறுவார்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.
எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.