26 மே 2023, வெள்ளி

புனித பிலிப்பு நேரி - மறைப்பணியாளர்

நினைவு

முதல் வாசகம்

தூய்மையானவை எவையோ அவற்றையே மனத்தில் இருத்துங்கள்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-9

சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார்.

எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி, கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.

இறுதியாக, சகோதரர் சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள்.

நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக் கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8. 9-10 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்.

1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

3
என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

7
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.
8
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

9
ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.
10
சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 9b, 5b

அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பில் நிலைத்திருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

சீடர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-26

அக்காலத்தில்

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தந்தையே, என் சீடர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.

நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.

இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளது போல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்துகொள்ளும்.

தந்தையே, உலகம் தோன்றும் முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்துகொண்டார்கள். நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

வாசகங்கள்



பிற நாட்கள்