31 சனவரி 2023, செவ்வாய்

புனிதர், புனிதையர் - பொது

முதல் வாசகங்கள்

பழைய ஏற்பாட்டிலிருந்து

1

உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் புறப்பட்டுச் செல்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-4a

அந்நாள்களில்

ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.

உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

2

உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!

லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 17-18

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்!

உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்துகொள். பழிக்குப் பழியென உன் இனத்தார் மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!”

ஆண்டவரின் அருள்வாக்கு.

3

உன் முழு இதயத்தோடு உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 3-9

மோசே மக்களை நோக்கிக் கூறியது: இஸ்ரயேலே, ஆண்டவருடைய கட்டளைகளுக்கும் நியமங்களுக்கும் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்துவழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்.

இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கு இடையே அடையாளப் பட்டமாக அவை இருக்கட்டும். உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

4

துறவியர் திருப்பலியில்

ஆண்டவரே அவர்களது உரிமைச் சொத்து.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 10: 8-9

மோசே மக்களை நோக்கிக் கூறியது: ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கவும், இந்நாள்வரை இருப்பது போல ஆண்டவர் திருமுன் நின்று பணிபுரியவும், அவருடைய பெயரால் ஆசி வழங்கவும், ஆண்டவர் லேவியின் குலத்தைத் தனித்து வைத்தார். எனவேதான், லேவியர்க்குத் தம் சகோதரர்களுடன் பங்கு இல்லை; உரிமைச் சொத்தும் இல்லை; உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களுக்குச் சொல்லி இருப்பது போல, ஆண்டவரே அவர்களது உரிமைச் சொத்து.

ஆண்டவரின் அருள்வாக்கு.

5

துறவியர் திருப்பலியில்

மலைமேல் என் திருமுன் வந்து நில்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-9a, 11-15a

அந்நாள்களில்

எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்துகொண்டு, தாம் சாக வேண்டும் எனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக்கொள்ளும்; நான் என் மூதாதையரை விட நல்லவன் அல்ல.” பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்து உறங்கினார்.

அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றார். அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஓர் அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக் கொண்டார்.

ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு; ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்” என்றார். அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார். அவர் அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார்.

அப்போது ஆண்டவர், “வெளியே வா; மலை மேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்ல இருக்கிறேன்” என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது.

அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, “எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது.

அதற்கு அவர், “படைகளின் கடவுளாகிய ஆண்டவர் மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறி விட்டனர்; உம் பலி பீடங்களைத் தகர்த்து விட்டனர்; உம் இறைவாக்கினரை வாளால் கொன்றுவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்” என்றார்.

அப்போது ஆண்டவர் அவரிடம், “நீ வந்த வழியே திரும்பித் தமஸ்குப் பாலைநிலம் நோக்கிச் செல்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

6

துறவியர் திருப்பலியில்

எலிசா புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 16b, 19-21

அந்நாள்களில்

ஆண்டவர் எலியாவை நோக்கிக் கூறியது: “ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்.”

எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார்.

எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, “நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும்; அதன்பின் உம்மைப் பின்செல்வேன்” என்றார்.

அதற்கு அவர், “சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!” என்றார்.

எலிசா எலியாவை விட்டுத் திரும்பிவந்து ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற, அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

7

நாங்கள் இருவரும் முதுமை அடையும்வரை இணைபிரியாது வாழச் செய்யும்.

தோபித்து நூலிலிருந்து வாசகம் 8: 4b-8

தோபியா படுக்கையிலிருந்து எழுந்து சாராவிடம், “அன்பே, எழுந்திரு. நம் ஆண்டவர் நம்மீது இரங்கிக் காத்தருளுமாறு பணிந்து மன்றாடுவோம்” என்றார். சாரா எழுந்து நின்றாள். அவர்கள் மன்றாடத் தொடங்கி, தங்களைக் காத்தருளுமாறு வேண்டினார்கள்.

தோபியா பின்வருமாறு வேண்டினார்: “எங்கள் மூதாதையரின் இறைவா, போற்றி! உமது பெயர் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் போற்றி! வானங்களும் உம் படைப்பு அனைத்தும் எக்காலமும் உம்மைப் போற்றுக! நீர் ஆதாமைப் படைத்தீர்; அவருடைய மனைவி ஏவாளை அவருக்குத் துணையாகவும் ஆதரவாகவும் உண்டாக்கினீர்.

அவர்கள் இருவரிடமிருந்தும் மனித இனம் தோன்றியது. ‘மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்ததொரு துணையை உருவாக்குவோம்’ என்று உரைத்தீர். இப்பொழுது என் உறவினள் இவளை நான் மனைவியாக ஏற்றுக்கொள்வது இச்சையின் பொருட்டன்று, நேர்மையான நோக்கத்தோடுதான்.

என்மீதும் இவள்மீதும் இரக்கம் காட்டும்; நாங்கள் இருவரும் முதுமை அடையும்வரை இணைபிரியாது வாழச் செய்யும்.” இருவரும் “ஆமென், ஆமென்” என்று கூறினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

8

நீதியுடன் இணைந்த தருமம் சிறந்தது.

தோபித்து நூலிலிருந்து வாசகம் 12: 6-13

அந்நாள்களில்

தோபித்தையும் அவர் மகன் தோபியாவையும் இரபேல் தனியாக அழைத்துப் பின்வருமாறு கூறினார்: “கடவுளைப் புகழுங்கள்; அவர் உங்களுக்குச் செய்த நன்மைகளை எல்லா உயிர்கள் முன்னும் அறிக்கையிடுங்கள். அவரது பெயரைப் புகழ்ந்து பாடுங்கள். மனிதர் அனைவர் முன்னும் கடவுளின் செயல்களைப் போற்றிப் புகழ்ந்து அறிக்கையிடத் தயங்காதீர்கள். மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பதும் அறிக்கையிடுவதும் அதனினும் சிறந்தது. நல்லதைச் செய்யுங்கள்; தீமை உங்களை அணுகாது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தை விட உண்மையான மன்றாட்டு சிறந்தது.

ஆனால் நீதியுடன் இணைந்த தருமம் அதைவிடச் சிறந்தது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட நீதியாகச் சேர்த்த சிறிதளவு செல்வம் சிறந்தது. தருமம் சாவினின்று காப்பாற்றும்; எல்லாப் பாவத்தினின்றும் தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும். பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள்.

முழு உண்மையையும் உங்களுக்கு எடுத்துரைப்பேன்; எதையும் உங்களிடமிருந்து மறைக்க மாட்டேன். ‘மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பது அதனினும் சிறந்தது’ என்று முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீரும் சாராவும் மன்றாடியபோது நான்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன்; இறந்தோரை நீர் புதைத்து வந்தபோதும் நான் அவ்வாறே செய்தேன்.

நீர் உணவு அருந்துவதை விட்டு எழுந்து வெளியே சென்று, இறந்தோரை அடக்கம் செய்யத் தயங்காத போது நானே உம்மைச் சோதிக்க அனுப்பப்பட்டேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

9

கைம்பெண்கள் திருப்பலியில்

யூதித்து கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார்.

யூதித்து நூலிலிருந்து வாசகம் 8: 2-8

யூதித்தின் கணவர் மனாசே. அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வாற்கோதுமை அறுவடைக் காலத்தில் மனாசே இறந்துபோனார். அவர் தம் வயலில் கதிர்களைச் சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்தவர்களை மேற்பார்வையிட்ட பொழுது, கடும் வெயில் அவரது தலையைத் தாக்கவே, அவர் படுத்த படுக்கையானார்; பின் தம் நகரான பெத்தூலியாவில் உயிர் துறந்தார்; தோத்தானுக்கும் பால்மோனுக்கும் இடையில் இருந்த வயலில் தம் மூதாதையரின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

யூதித்து கைம்பெண் ஆனார்; மூன்று ஆண்டு நான்கு மாதமாய்த் தம் இல்லத்திலேயே இருந்தார். தம் வீட்டின் மேல்தளத்தில் தமக்காகக் கூடாரம் ஒன்று அமைத்துக்கொண்டார்; இடுப்பில் சாக்கு உடை உடுத்தியிருந்தார்; கைம்பெண்ணுக்கு உரிய ஆடைகளை அணிந்திருந்தார்.

தம் கைம்மைக் காலத்தில் ஓய்வு நாளுக்கு முந்தின நாளும், ஓய்வு நாள் அன்றும், அமாவாசைக்கு முந்தின நாளும், அமாவாசை அன்றும், இஸ்ரயேல் இனத்தாருக்குரிய திருநாள்கள், மகிழ்ச்சியின் நாள்கள் தவிர மற்ற நாள்களில் நோன்பிருந்து வந்தார். அவர் பார்வைக்கு அழகானவர்; தோற்றத்தில் எழில் மிக்கவர். ஆண் பெண் பணியாளர்களோடு பொன், வெள்ளி, கால்நடைகள், வயல்கள் ஆகியவற்றை அவர் கணவர் மனாசே அவருக்கு விட்டுச் சென்றிருந்தார். இவை எல்லாம் யூதித்தின் உடைமையாயின.

யூதித்து கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார். அவரைப் பற்றி யாரும் தவறாகப் பேசியது இல்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

10

கடவுளை விட மனிதரை மிகுதியாக மாட்சிமைப்படுத்தக் கூடாது.

எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி): 4: 17b-e, h

அந்நாள்களில்

மொர்தெக்காய் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, அனைத்தையும் ஆளும் மன்னராகிய ஆண்டவரே, அனைத்தும் உம் அதிகாரத்தின் கீழ் உள்ளன. நீர் இஸ்ரயேலைக் காக்கத் திருவுளம் கொள்ளும்போது எவராலும் உம்மை எதிர்த்து நிற்க முடியாது.

விண்ணையும் மண்ணையும் விண்ணின் கீழ் உள்ள ஒவ்வொரு வியத்தகு பொருளையும் படைத்தவர் நீரே. நீரே அனைத்திற்கும் ஆண்டவர். ஆண்டவராகிய உம்மை எதிர்ப்பவர் எவரும் இலர்.

ஆண்டவரே, நீர் அனைத்தையும் அறிவீர். தருக்குற்ற ஆமானுக்கு நான் வணக்கம் செலுத்த மறுத்ததற்குக் காரணம், செருக்கோ இறுமாப்போ வீண்பெருமையோ அல்ல என்பதையும் நீர் அறிவீர். இஸ்ரயேலின் மீட்புக்காக நான் அவனுடைய உள்ளங்கால்களைக் கூட முத்தமிட்டிருப்பேன். ஆனால் கடவுளை விட மனிதரை மிகுதியாக மாட்சிமைப்படுத்தக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டேன். ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு யாரையும் நான் வணங்க மாட்டேன். நான் ஆமானை வணங்க மறுப்பது செருக்கினாலன்று.

என் மன்றாட்டைக் கேட்டருளும்; உமது மரபுரிமைமீது இரக்கங்கொள்ளும். ஆண்டவரே, நாங்கள் உயிர் வாழ்ந்து உமது பெயரைப் புகழ்ந்து பாடும்பொருட்டு, எங்கள் அழுகையை மகிழ்ச்சியாக மாற்றுவீர்; உம்மைப் புகழ்ந்தேத்தும் வாயை அடைத்துவிடாதீர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

11

ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்.

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31

திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள்.

அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒரு நாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள்.

இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.

எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.

ஆண்டவரின் அருள்வாக்கு.

12

ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 7-13

ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரிடம் இரக்கத்துக்காகக் காத்திருங்கள்; நெறி பிறழாதீர்கள்; பிறழ்ந்தால் வீழ்ச்சி அடைவீர்கள். ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்; உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காமற் போகாது. ஆண்டவருக்கு அஞ்சுவோரே, நல்லவை மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; நிலையான மகிழ்ச்சியையும் இரக்கத்தையும் எதிர்நோக்கியிருங்கள்.

முந்திய தலைமுறைகளை எண்ணிப்பாருங்கள். ஆண்டவரிடம் பற்றுறுதி கொண்டிருந்தோருள் ஏமாற்றம் அடைந்தவர் யார்? அவருக்கு அஞ்சி நடந்தோருள் கைவிடப்பட்டவர் யார்? அவரை மன்றாடினோருள் புறக்கணிக்கப்பட்டவர் யார்?

ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்; பாவங்களை மன்னிப்பவர்; துன்ப வேளையில் காப்பாற்றுகிறவர். கோழை நெஞ்சத்தவருக்கும் ஆற்றலற்ற கையருக்கும் இரட்டை வேடமிடும் பாவிகளுக்கும் ஐயோ, கேடுவரும்! உறுதியற்ற உள்ளத்தவருக்கும் ஐயோ, கேடு வரும்! ஏனெனில் அவர்கள் பற்றுறுதி கொள்ளவில்லை; எனவே அவர்களுக்குப் பாதுகாப்பு இராது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

13

நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும்.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 3: 17-18, 20-24

குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர். நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும். ஆண்டவரின் ஆற்றல் பெரிது; ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார்.

உனக்கு மிகவும் கடினமாக இருப்பவற்றைத் தேடாதே; உன் ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராயாதே. உனக்குக் கட்டளையிடப்பட்டவை பற்றி எண்ணிப்பார்; ஏனெனில் மறைந்துள்ளவை பற்றி நீ ஆராய வேண்டியதில்லை. உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே.

ஏனெனில் உனக்குக் காட்டப்பட்டவையே மனித அறிவுக்கு எட்டாதவை. மாந்தரின் இறுமாப்பு பலரை நெறிபிறழச் செய்திருக்கிறது; தவறான கணிப்புகள் தீர்ப்புகளை ஊறுபடுத்தியுள்ளன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

14

நல்ல மனைவியின் அழகு ஆண்டவர் உறையும் உயர்வானில் எழும் கதிரவனைப் போன்றது.

சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 26: 1-4, 13-16

துணிவுள்ள மனைவியை அடைந்த கணவன் பேறுபெற்றவன். அவனுடைய வாழ்நாளின் எண்ணிக்கை இரு மடங்காகும். பற்றுள்ள மனைவி தன் கணவரை மகிழ்விக்கிறாள்; அவன் தன் வாழ்நாள் முழுவதும் அமைதியாகக் கழிப்பான்.

நல்ல மனைவியே ஒருவனுக்குக் கிடைக்கும் நல்ல சொத்து. ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பெறும் செல்வங்களுள் ஒன்றாக அவளும் அருளப்படுவாள். செல்வனாகவோ ஏழையாகவோ இருந்தாலும் அத்தகையவன் உள்ளம் மகிழ்ந்திருக்கும்; எக்காலத்திலும் அவனது முகம் மலர்ந்திருக்கும்.

ஒரு மனைவியிடம் விளங்கும் நன்னயம் அவள் கணவனை மகிழ்விக்கும்; அவளிடம் காணப்படும் அறிவாற்றல் அவன் எலும்புகளுக்கு வலுவூட்டும். அமைதியான மனைவி ஆண்டவர் அளித்த கொடை; நற்பயிற்சி பெற்றவளுக்கு ஈடானது ஏதுமில்லை. அடக்கமுள்ள மனைவியின் அழகே அழகு! கற்புள்ளவளுக்கு ஈடு இணை எதுவுமில்லை.

ஒழுங்கமைதி உடைய இல்லத்தில் விளங்கும் நல்ல மனைவியின் அழகு ஆண்டவர் உறையும் உயர்வானில் எழும் கதிரவனைப் போன்றது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

15

அறச்செயலில் ஈடுபட்டோர் திருப்பலியில்

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுங்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 6-11

ஆண்டவர் கூறுவது:

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் ‘இதோ! நான்’ என மறுமொழி தருவார்.

உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தோட்டம் போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்று போலும் இருப்பாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

16

உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 7-9

ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்; நீர் என்னை விட வல்லமையுடையவர்; என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்; நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல்லாம் ‘வன்முறை அழிவு’ என்றே கத்த வேண்டியுள்ளது; ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.

“அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்” என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

17

ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே!

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 6: 6-8

ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வரவேண்டுமா?

ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா?

ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?

ஆண்டவரின் அருள்வாக்கு.

18

ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்.

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 2: 3; 3: 12-13

நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப் பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையை நாடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள்; ஆண்டவரது சினத்தின் நாளில் ஒருவேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும்.

ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்; அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்ய மாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது; அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தை போல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பாஸ்கா காலத்தில்

முதல் வாசகங்கள்

புதிய ஏற்பாட்டிலிருந்து

1

துறவியர் திருப்பலியில்

ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-35

நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது.

திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்.

தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலங்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டுவந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

2

நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 3: 14b, 20-22

‘ஆமென் எனப்படுபவரும், நம்பிக்கைக்குரிய உண்மையான சாட்சியும், கடவுளது படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவே: இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.

நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன்.

கேட்கச் செவியுடையோர், திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.’

ஆண்டவரின் அருள்வாக்கு.

3

ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 19: 1, 5-9a

யோவானாகிய நான் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது: “அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.”

அரியணையிலிருந்து எழுந்த ஒரு குரல், “கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்” என்று ஒலித்தது.

பின்னர் பெருந்திரளான மக்களின் கூச்சல் போலும், பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போலும், பேரிடி முழக்கம்போலும் எழுந்த பேரொலியைக் கேட்டேன். அது சொன்னது: “அல்லேலூயா! நம் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்; அவர் ஆட்சி செலுத்துகின்றார். எனவே மகிழ்வோம், பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம். ஏனெனில் ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது. மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார். மணமகள் அணியுமாறு பளபளப்பான, தூய்மையான, விலையுயர்ந்த மெல்லிய ஆடை அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆடை இறைமக்களின் நீதிச் செயல்களே.”

அந்த வானதூதர் என்னிடம், “ ‘ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

4

வெற்றி பெறுவோர் இவற்றை உரிமைப்பேறாகப் பெறுவர்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 5-7

அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார். மேலும், “ ‘இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை’ என எழுது” என்றார்.

பின்னர் அவர் என்னிடம் கூறியது: “எல்லாம் நிறைவேறிவிட்டது; அகரமும் னகரமும் நானே; தொடக்கமும் முடிவும் நானே. தாகமாய் இருப்போருக்கு வாழ்வு அளிக்கும் நீரூற்றிலிருந்து நான் இலவசமாய்க் குடிக்கக் கொடுப்பேன். வெற்றி பெறுவோர் இவற்றை உரிமைப்பேறாகப் பெறுவர். நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்கள்

1

திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவரே நற்பேறு பெற்றவர்.

அல்லது: (திபா 40: 4a): ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

அல்லது: (திபா 92: 13): ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் செழித்தோங்குவர்.

1
நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்.
2
ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். - பல்லவி

3
அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனி தந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். - பல்லவி

4
பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.
6
நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். - பல்லவி

2

திபா 15: 2-3a. 3bc-4. 5 (பல்லவி: 1b)

பல்லவி: ஆண்டவரே, உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?

2
மாசற்றவராய் நடப்போரே! இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்;
3a
தம் நாவினால் புறங்கூறார். - பல்லவி

3bc
தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4
நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். - பல்லவி

5
தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். - பல்லவி

3

திபா 16: 1-2a,5. 7-8. 11 (பல்லவி: 5a)

பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.

1
இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2a
நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்’ என்று சொன்னேன்.
5
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி

7
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி

11
வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி

4

திபா 23: 1-3. 4. 5. 6 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். - பல்லவி

4
சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

5
என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

5

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8. 9-10 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்.

1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

3
என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

7
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.
8
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

9
ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.
10
சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. - பல்லவி

6

திபா 103: 1-2. 3-4. 8-9. 13-14. 17-18 (பல்லவி: 1a)

பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! - பல்லவி

3
அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4
அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். - பல்லவி

8
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
9
அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். - பல்லவி

13
தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.
14
அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது. - பல்லவி

17
ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்.
18
அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும். - பல்லவி

7

திபா 112: 1-2. 3-4. 5-7a. 7b-8. 9 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

அல்லது: அல்லேலூயா.

1
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2
அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசி பெறும். - பல்லவி

3
சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
4
இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். - பல்லவி

5
மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6
எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.
7a
தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது. - பல்லவி

7b
ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.
8
அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. - பல்லவி

9
அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். - பல்லவி

8

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!

1
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! - பல்லவி

3
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். - பல்லவி

4
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! - பல்லவி

9

திபா 131: 1. 2. 3

பல்லவி: உம்மோடு நான் அமைதியாய் இருக்க, ஆண்டவரே என் உயிரைக் காத்தருளும்.

1
ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. - பல்லவி

2
மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாய் உள்ளது. - பல்லவி

3
இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! - பல்லவி

இரண்டாம் வாசகங்கள்

1

தமக்கு ஏற்புடையோர் ஆனோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-30

சகோதரர் சகோதரிகளே,

தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார்தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள், தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்து பேசுகிறார்.

மேலும், கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும்.

தம்மால் முன்பே தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டும் எனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப் பேறானவராய் இருக்க வேண்டும் என்றே இப்படிச் செய்தார். தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோர் ஆனோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

2

வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 26-31

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனை பேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடிமக்கள் எத்தனை பேர்? ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார்.

அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, “பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

3

அன்பு ஒருபோதும் அழியாது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 31- 13: 13

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் மேலான அருள்கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும் விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.

நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கு இல்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.

இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.

என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.

இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சுப் பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது. ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம்.

நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப் போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்கு உரியவற்றை அறவே விட்டுவிட்டேன்.

ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பது போல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளது போல் முழுமையாய் அறிவேன்.

ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

அன்பு ஒருபோதும் அழியாது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 13: 4-13

சகோதரர் சகோதரிகளே,

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.

இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சுப் பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது. ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது; நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம்.

நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப் போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப் போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்கு உரியவற்றை அறவே விட்டுவிட்டேன்.

ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பது போல் மங்கலாய்க் காண்கிறோம்; ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளது போல் முழுமையாய் அறிவேன்.

ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

4

கிறிஸ்து முன் உங்களைக் கற்புள்ள கன்னியாக நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 17- 11: 2

சகோதரர் சகோதரிகளே,

“பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.” தமக்குத் தாமே நற்சான்று கொடுப்போர் அல்ல, மாறாக ஆண்டவரின் நற்சான்று பெற்றவரே ஏற்புடையவர் ஆவர்.

என் அறிவீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக் கொள்ளவேண்டும்; ஆம் சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள். உங்கள்மீது கடவுள் கொண்டுள்ள அதே அன்பார்வத்தை நானும் கொண்டுள்ளேன். கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்குமிடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியாக நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

5

இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-20

சகோதரர் சகோதரிகளே,

திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன். அதற்கு அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.

எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.

இறைமகன் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

6

நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 14-16

சகோதரர் சகோதரிகளே,

நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்த வரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். விருத்தசேதனம் செய்து கொள்வதும் செய்துகொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது.

இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக!

ஆண்டவரின் அருள்வாக்கு.

7

அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-19

சகோதரர் சகோதரிகளே,

விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன். அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருள்வாராக! நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன்மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!

ஆண்டவரின் அருள்வாக்கு.

8

கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்துகொள்ளுங்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 10-13, 18

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள்.

அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்துகொள்ளுங்கள். ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சி புரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின் மீது ஆற்றல் உடையோர், வான் வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம்.

எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று, அனைத்தின் மீதும் வெற்றிபெற்று நிலைநிற்க வல்லமை பெறும்படி, கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்; எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாய் இருங்கள்; இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

9

பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14

சகோதரர் சகோதரிகளே,

உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவனாக இயலாது. கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன். அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்.

நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன்.

அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்று மட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

10

தூய்மையானவை எவையோ அவற்றையே மனத்தில் இருத்துங்கள்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-9

சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார்.

எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.

இறுதியாக, சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள்.

நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக் கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

11

அன்பையே கொண்டிருங்கள்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-17

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவை அனைத்தையும் பிணைத்து நிறைவு பெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கு என்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.

எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

12

கைம்பெண்கள் திருப்பலியில்

ஆதரவின்றித் தனியாய் விடப்பட்ட கைம்பெண் கடவுள் மேல் கொண்ட எதிர்நோக்குடன் இறை வேண்டலில் நிலைத்திருப்பாராக.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 3-10

அன்பிற்குரியவரே,

கைம்பெண்களுக்கு மதிப்புக் கொடு. ஆதரவற்ற கைம்பெண்களையே இங்குக் குறிப்பிடுகிறேன். பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ உடைய கைம்பெண்கள் தாங்கள் கொண்டுள்ள இறைப்பற்றிற்கு ஏற்ப முதலில் தங்கள் சொந்தக் குடும்பத்தினரைப் பேணவும் பெற்றோருக்கு நன்றிக் கடன் ஆற்றவும் கற்றுக்கொள்ளட்டும். இதுவே கடவுளின் முன்னிலையில் ஏற்புடையது.

ஆதரவின்றித் தனியாய் விடப்பட்ட கைம்பெண் கடவுள் மேல் கொண்ட எதிர்நோக்குடன் அல்லும் பகலும் மன்றாட்டிலும் இறை வேண்டலிலும் நிலைத்திருப்பாராக. சிற்றின்பத்தில் உழல்பவர்கள் நடைப்பிணங்களே. கைம்பெண்கள் யாதொரு குறைச்சொல்லுக்கும் ஆளாகாதவாறு வாழ இவற்றை அவர்களுக்குக் கட்டளையிடு.

தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர். அவர்கள் விசுவாசமற்றோரை விடத் தாழ்ந்தோராவர்.

அறுபது வயதுக்குக் குறையாத ஒருவரே கைம்பெண்ணாகப் பதிவுசெய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அவர் ஒரு கணவரைக் கொண்டவராய் இருந்திருக்க வேண்டும். அவர் பிள்ளைகளை வளர்த்தல், விருந்தோம்பல், இறைமக்களின் காலடிகளைக் கழுவுதல், இன்னலுற்றோருக்கு உதவி செய்தல் போன்ற அனைத்து நற்செயல்களில் ஈடுபட்டு அவற்றால் நற்சான்று பெற்றவராக இருக்க வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

13

நம்பிக்கை செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாய் இருக்கும்.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-17

என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச் சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா?

ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர்காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்” என்பாரென்றால் அதனால் பயன் என்ன?

அதைப் போலவே, நம்பிக்கையும் செயல்வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாய் இருக்கும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

14

கடவுள்மேல் நம்பிக்கை கொண்டிருந்த புனித பெண்கள்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-9

திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது. முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல, மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது.

முற்காலத்தில் கடவுள்மேல் நம்பிக்கை கொண்டிருந்த தூய பெண்களும் இவ்வாறுதான் தங்களை அணி செய்துகொண்டார்கள்; தங்கள் கணவருக்குப் பணிந்திருந்தார்கள். அவ்வாறே, சாரா ஆபிரகாமைத் “தலைவர்” என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள்.

அவ்வாறே, திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்.

இறுதியாக, நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதர அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள். தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; பழிச்சொல்லுக்குப் பழிச்சொல் கூறாதீர்கள்; மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

15

ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7b-11

அன்பிற்குரியவர்களே,

இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாட்டோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும். முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள். நீங்கள் கடவுளுடைய பல்வகை அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள் கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.

ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால், அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப் போல் இருக்கட்டும். ஒருவர் பணி செய்யும் கொடையைப் பெற்றிருந்தால், கடவுள் அருளும் ஆற்றலைப் பெற்றவர் போல் பணி செய்யட்டும்; இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார். அவருக்கே மாட்சியும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

16

அறச்செயலில் ஈடுபட்டோர் திருப்பலியில்

நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-18

அன்பிற்குரியவர்களே,

நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோம் என அறிந்துள்ளோம்.

அன்பு கொண்டிராதோர் சாவிலேயே நிலைத்திருக்கின்றனர். தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளியிடமும் நிலைவாழ்வு இராது என்பது உங்களுக்குத் தெரியுமே.

கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லை என்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?

பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

17

நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-16

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும்பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர் மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும்.

அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் அறிந்து கொள்கிறோம்.

தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கின்றோம்.

இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம்.

கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

18

உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-5

அன்பிற்குரியவர்களே,

இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர்.

நாம் கடவுள் மீது அன்பு கொண்டு அவர் கட்டளைகளைக் கடைப் பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள் மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை.

ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலிகள்

1. மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

2. மத் 5: 6

அல்லேலூயா, அல்லேலூயா! நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். அல்லேலூயா.

3. மத் 5: 8

அல்லேலூயா, அல்லேலூயா! தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அல்லேலூயா.

4. மத் 11: 25 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

5. மத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

6. மத் 23: 11, 12b

அல்லேலூயா, அல்லேலூயா! உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

7. லூக் 21: 36b

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

8. யோவா 8: 12b

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

9. யோவா 8: 31b-32

அல்லேலூயா, அல்லேலூயா! என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

10. யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! ‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். அல்லேலூயா.

11. யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடி கொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

12. யோவா 15: 4a, 5b

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். அல்லேலூயா.

13. யோவா 15: 9b, 5b

அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பில் நிலைத்திருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகங்கள்

1

மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கைம்மாறு மிகுதியாகும்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12a

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

2

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 13-16

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது.

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாய் இருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

3

பாறைமீது கட்டிய வீடு; மணல்மீது கட்டிய வீடு.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-27

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்றுபோங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்.

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின் மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

4

ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30

அக்காலத்தில்

இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.

ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

5

தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-46

அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

6

என் பொருட்டுத் தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவார்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 24-27

அக்காலத்தில்

இயேசு தம் சீடரைப் பார்த்து, “ என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவார்.

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

7

சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5

அக்காலத்தில்

சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்:

“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

8

துறவியர் திருப்பலியில்

விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12

அக்காலத்தில்

பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், “ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டனர்.

அவர் மறுமொழியாக, “படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்’ என்று நீங்கள் மறை நூலில் வாசித்ததில்லையா?” என்று கேட்டார். மேலும் அவர், “இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்”என்றார்.

அவர்கள் அவரைப் பார்த்து, “அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கிவிடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?” என்றார்கள்.

அதற்கு அவர், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்க முதல் அவ்வாறு இல்லை. பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, “கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாது இருப்பதே நல்லது” என்றார்கள்.

அதற்கு அவர், “அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மணஉறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளக்கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்”என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

9

என் பெயரின் பொருட்டு எல்லாவற்றையும் விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 27-29

அக்காலத்தில்

பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு, “புதுப்படைப்பின் நாளில் மானிடமகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

10

உன் கடவுளிடம் அன்பு செலுத்து. உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40

அக்காலத்தில்

இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.

அவர், “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

11

இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “ விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதியுடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.

அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள்.

முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.

பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள்.

அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

12

சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து, அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும், வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.

நெடுங்காலத்திற்குப்பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.

ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார்.

அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார்.

அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது’ என்றார்.

அதற்கு அவருடைய தலைவர், ‘சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்’ என்று கூறினார்.

‘எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்து, பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடம் இருந்து அவரிடம் உள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்று கூறினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-23

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்கு உவமையாகக் கூறியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து, அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும், வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.

நெடுங்காலத்திற்குப்பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார்.

ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, ‘ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்’ என்றார்.

அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.

இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, ‘ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்’ என்றார்.

அவருடைய தலைவர் அவரிடம், ‘நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்’ என்றார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

13

அறச்செயலில் ஈடுபட்டோர் திருப்பலியில்

மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?’ என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை’ என்பார்.

அதற்கு அவர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள்.

அப்பொழுது அவர், ‘மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ, அதை எனக்கும் செய்ய வில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்.

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-40

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?’ என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

14

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்.

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-35

அக்காலத்தில்

இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.

அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, “என் தாயும் என் சகோதரர்களும் யார்?” என்று கேட்டு, தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

15

கல்விப் பணியாற்றியோர்

சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 34-37

அக்காலத்தில்

இயேசுவின் சீடர்கள் தங்களுள் பெரியவர் யார் என்பதைப் பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள்.

அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார்.

பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, “இத்தகைய சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

16

கல்விப் பணியாற்றியோர்

சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்.

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 13-16

அக்காலத்தில்

சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.

இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள் மீது வைத்து ஆசி வழங்கினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

17

துறவியர் திருப்பலியில்

நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்.

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-30

அக்காலத்தில்

இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ‘கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட’ ” என்றார்.

அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார்.

அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார்.

இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள்.

மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.

சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

அப்போது பேதுரு அவரிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார்.

அதற்கு இயேசு, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்.

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-27

அக்காலத்தில்

இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ‘கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட’ ” என்றார்.

அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார்.

அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார்.

இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள்.

மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.

சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

18

உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்; உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே. உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே. திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார். உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.

பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

19

துறவியர் திருப்பலியில்

நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62

அக்காலத்தில்

இயேசு சீடர்களோடு வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார்.

இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றி வாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.

வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார். இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

20

மார்த்தா இயேசுவைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில்

இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலை இல்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

21

துறவியர் திருப்பலியில்

உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 32-34

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.

உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப் பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக்கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.

உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

22

நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-40

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உங்கள் இடையை வரிந்து கட்டிக்கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.

தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாய் இருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.

எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.

நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

23

துறவியர் திருப்பலியில்

தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33

அக்காலத்தில்

பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராய் இருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது.

உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்க மாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை’ என்பார்களே!

வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும் போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

24

ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்.

நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளை திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது.

நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.

நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.

நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

25

நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.

நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளையிடுவதை எல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.

இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.

நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

26

என் சீடர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-26

அக்காலத்தில்

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தந்தையே, அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.

நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.

இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளது போல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்துகொள்ளும்.

தந்தையே, உலகம் தோன்றுமுன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்துகொண்டார்கள். நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள் மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

வாசகங்கள்



பிற நாட்கள்